அபு மலை(Mount Abu)

அபு மலையைப் பற்றி..

இராஜஸ்தானில் உள்ள அழகிய மலை வாசஸ்தலம் மவுண்ட் அபு. பாலைவனப் பிரதேச இராஜஸ்தானில் எழில் கொஞ்சும் இயற்கை அழகு நிறைந்த சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. 

அபு மலை

அபு மலை

அபு மலை ஆரவல்லி மலை தொடரில் கடல் மட்டத்திலிருந்து (1219 மீட்டர்) 4000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

முற்காலத்தில் 33 கோடி தேவி தேவதைகள் இங்கு வாழ்ந்ததாக சரித்திரம் கூறுகிறது.  இங்கு வசிஷ்ட முனிவர்  உலக மக்களை அரக்கர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக யாகங்கள் வளர்த்தார். இந்த யாகம் பசுவின் முகமுடைய ஒரு கல்லின் வாயிலிருந்து வெளிப்பட்ட இயற்கை நீருற்றின் அருகில் செய்யப் பட்டது. இன்றும் கௌமுக் (cowmukh) என்ற அந்த இடம் இருக்கிறது.

மற்றொரு புராணப்படி, ஒரு சமயம் வசிஷ்ட முனிவரின் பசு ஒரு குறுகிய மலை இடையில் மாட்டிகொண்டது. வசிஷ்டர் சிவ பெருமானிடம் முறையிட, அவர் சரஸ்வதி நதியை அனுப்பினார். நதி மலை இடையில் பாய்ந்து நிரம்பி பசு மேலெழுந்து வந்தது. இது மாதிரி மறுபடியும் நடக்க கூடாதென வசிஷ்டர் நினைத்தார். அவர் மலைகளின் அரசன் இமய மலையின் கடைசி மகனை பணித்தார். அவர் மிகப் பெரிய பாம்பான “அற்புதத்தின்” துணை கொண்டு அந்த குறுகிய மலை பகுதியை நிறைத்தார். அந்தப் பகுதி அற்புத மலை (Mount Arbud) என்று பெயர் பெற்றது. நாளடைவில் இது அபு மலை (Mount Abu) என்று பெயர் மாறியது.

இந்தப் பகுதி ஜைனர்களின் முக்கிய தலமாக விளங்குகிறது. ஜைனர்களின் முக்கிய தீர்த்தங்கரர்களின் ஒருவரான 24 வது தீர்த்தங்கரர் பகவான் மகாவீரர் இங்கு எழுந்தருளி ஆசி வழங்கியதாக குறிப்புகள் கூறுகின்றன. 

 

பயணத்தைப் பற்றி

எனது சிறு வயதிலிருந்தே சென்னையைத் தவிர வேறு இடங்களை பார்த்திராத நான், முதன் முதலில் தனியாக (பெற்றோர்கள் அல்லாமல்) ஒரு சிறு குழுவுடன் நீண்ட தூரம் பயணம் செய்தது இதுவே முதல் முறை. (2084 கிமீ சென்னையில் இருந்து) 

 

சென்னையில் இருந்து நவஜீவன் இரயிலில் (சென்னையில் இருந்து தினமும் காலை 09.35 மணிக்கு புறப்படும்) பயணம் செய்து அகமதாபாத் சென்று அடைந்தோம்(மறுநாள் இரவு 08.30) அங்கிருந்து வேறொரு இரயில் (நிறைய இரயில்கள் உள்ளன) [ஆஷ்ரம் எக்ஸ்ப்ரெஸ் இரவு 11.30 மணிக்கு] மூலம் அபு மலை  பயணித்தோம்.  விடிகாலை 3.30 மணியளவில் அபு ரோடு சென்று அடைந்தோம். (நேரடி இரயில் சென்னை ஜோத்பூர் எக்ஸ்பிரஸ், சனி மாலை 3.15 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும். அபு ரோடு திங்கள் காலை 6.30 மணிக்கு சென்றடையும்)

 

எங்கள் குழுவிற்காக ஏற்பாடு செய்த வாகனம் வந்து எங்களை தங்குமிடத்திற்கு அழைத்து சென்றது. அபு ரோடு பேருந்து நிலையம் இரயில் நிலையத்திற்கு அருகிலேயே உள்ளது.  மற்றும் ஏராளமான வாடகை ஜீப்களும் ஆட்டோக்களும்  உள்ளன. (ஆட்டோக்களில் பயணம் செய்ய குறைந்த பட்சம் ஒருவருக்கு 5 ரூபாய் இன்றைய அளவில்) பேருந்து நிலையத்திலிருந்து நிறைய பேருந்துகள் அபு மலை நோக்கி செல்கின்றன.

 

அபு ரோடு பேருந்து நிலையத்திலிருந்து அபு மலை (27 கிமீ) செல்ல பேருந்தில் 25 ரூபாய் கட்டணம்.

 

நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து அபு மலை செல்வதற்க்காக ஒரு தனியார் பேருந்தில் நாங்கள் பயணித்தோம். ஏறக்குறைய 1 மணி நேர பயணத்தில் அபு மலை சென்றடைந்தோம். வழியில் சுற்றுலா வாகன வரி ஒருவருக்கு 12 ரூபாய் மற்றும் 5 ரூபாய் என இரு இடங்களில் செலுத்த வேண்டும்.

 

அபு மலையில் பார்க்க வேண்டிய இடங்கள்:

 

1. நக்கி ஏரி (NAKKI  LAKE)

2. ஓம் சாந்தி பவன்: பிரம்ம குமாரிகள் ஆன்மிகப் பல்கலைகழகம்– (UNIVERSAL PEACE HALL)

3. தில்வாரா ஜெயின்  கோவில் (DILWARA TEMPLE)

4. தவளை பாறை (TOAD ROCK)

5. ஆதார் தேவி / அற்புத தேவி கோவில் (AADHAR DEVI / ARPUD DEVI TEMPLE)

6. அச்சல் கர் கோவில் மற்றும் கோட்டை (ACCHAL GARH TEMPLE AND FORT)

7. குருஷிகர் கோவில் (GURU SHIGARH TEMPLE)

8. அமைதிப் பூங்கா (PEACE PARK)

9. சூரிய அஸ்தமனம் (SUNSET POINT)

 

நக்கி ஏரி  

நக்கி ஏரி (NAKKI  LAKE)

நக்கி ஏரி (NAKKI LAKE)

முற்காலத்தில் நக்கி ஏரி இந்துக்களின் புனித ஏரியாக கருதப்பட்டது.  நக்கி ஏரியின் பெயர்க் காரணம் என்னவென்றால், அரக்கர்களிடமிருந்து தேவி தேவதைகள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக தங்களுடைய நகத்தால் தோண்டி ஏரியை உருவாக்கி வாழ்ந்து வந்தனர். (நக் (nakh) = நகம் என்ற பொருள்படும் ஹிந்திச்சொல்) இது ஆரவல்லி மலை தொடருக்கிடையில் உள்ள செயற்கை ஏரியாகும். 

இந்த ஏரி அரை மைல் நீளமும் கால் மைல் அகலமும், 20 முதல் 30 அடி ஆழமும் மேற்குப் பகுதியில் தடுப்பணையும் கொண்டது. 12 பிப்ரவரி 1948 அன்று மகாத்மா காந்தியின் அஸ்தி இங்கு கரைக்கப்பட்டது. இதன் நினைவாக அருகில் காந்தி நினைவு வளைவும் பூங்காவும் உள்ளது.

இந்த எரியில் படகு சவாரி செய்வதற்கான வசதி உள்ளது. ஏரியின் அருகில் பெரிய கடைத்தெரு உள்ளது. வித விதமான ஆடை, அணிகலன்கள், கலைப் பொருட்கள் வாங்கலாம்.

எங்களில் சிலர் ஒரு குழுவாக 6 பேர் முதல் 16 பேர் வரை உள்ள படகுகளில் படகு சவாரி செய்தோம்.  கடைத்தெருவில் சிலர் பொருட்களை வாங்கினர்.

 

 தவளைப் பாறை  

தவளைப் பாறை

தவளைப் பாறை

அபு மலையில் நிறைய இடங்களில் பாறைகள் விலங்குகள் போலவும் மனித உருவங்கள் போலவும் தோற்றமளிக்கின்றன. நக்கி ஏரி அருகில் தெற்குப் பக்கம் உள்ள ஒரு பாறை பெரிய தவளை அமர்ந்து ஏரியைப் பார்ப்பது போல் தோற்றமளிக்கிறது.  இங்கிருந்து பார்க்கும் போது முழு மலை பள்ளத்தாக்கும் ரம்மியமாக காட்சியளிக்கிறது. சுற்றுலா பயணிகள் இதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

 

  

ஓம் சாந்தி பவன்பிரம்ம குமாரிகள் ஆன்மிகப் பல்கலைகழகம் 

 

ஓம் சாந்தி பவன்இது ஒரு மிகப்பெரிய ஹால், இடையே தூன்களில்லாமல் 3500 பேர் அமரக்கூடியது. இந்த ஹாலில் 16 மொழிகளை மொழிபெயர்ப்பதர்க்கான வசதிகள்/சாதனங்கள்  உள்ளது.  மொழிபெயர்ப்பை கேட்பதற்கு ஒவ்வொரு இருக்கையிலும் தனித் தனியாக ஹெட்போன் இந்த ஹாலில் பல சர்வதேச கருத்தரங்கங்கள் நடை பெற்றுள்ளன.  இந்த இடத்தில்  பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் அமைப்பின் அகில உலக தலைமையகம் அமைந்துள்ளது.

(Head Phone) உள்ளது.

  

ஓம் சாந்தி பவன்

ஓம் சாந்தி பவன்

பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பற்றி:-

இது ஒரு உலகளாவிய ஆன்மிக நிறுவனம். UNO, UNESCO, UNICEF ஆல் அங்கீகரிக்கப்பட்டது. மனிதப் பண்புகளை வளர்ப்பதில் மற்றும் இலவச ராஜயோக தியானம் கற்றுத் தருவதிலும் உலகெங்கும் 8500 கிளை நிலையங்களுடன் செயல்பட்டு வரும் ஆன்மிக அமைப்பு.

 

1936 ஆம் ஆண்டு பிரம்மா பாபா என்று அழைக்கப்பட்ட தாதா லேக்ராஜ், சிந்து மாகாணம் ஹைதராபாதில் (அப்பொழுது ஒன்றுபட்ட இந்தியா, இப்பொழுது பாகிஸ்தானில் உள்ளது)  ஓம் மண்டலி என்ற பெயரில் தோற்றுவித்த இந்த அமைப்பு 1950 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு ராஜஸ்தானில் உள்ள அபு மலையில் மாற்றப்ப்பட்டது. தற்போது பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் என்ற பெயரில் அபு மலையில் மதுவனத்தை (தேன் நிறைந்த காடு) தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.

 

நான் யார்? கடவுள் யார்? உலக நாடக சக்கரம் பற்றிய தெளிவான விளக்கங்கள் இங்கு தரப்படுகிறது.  பல மொழி புத்தகங்கள் மூலமும் லேசர் ஒலி ஒளிக் காட்சிகள் மூலமும் தெளிவான விளக்கங்கள் இங்கு தரப்படுகிறது.  இலவச ராஜயோக தியானம் (மனம் அமைதியடைய எளிய முறை தியானம்) கற்றுத் தரப்படுகிறது.

  

நான் யார்? கடவுள் யார்? உலக நாடக சக்கரம் பற்றிய தெளிவான விளக்கங்கள் கேட்டு தெரிந்து கொண்டோம். ஆச்சரியமான விஷயம் இனிய தமிழில் அங்குள்ளவர்கள் பேசியது மற்றும் லேசர் ஒலி ஒளிக் காட்சிகள்  தமிழில் காண்பித்தது.  ஒலி ஒளிக் காட்சிகள் அனைத்து இந்திய மொழிகளிலும் மற்றும் ஆங்கிலத்திலும் ஒளிபரப்பு செய்யபடுகிறது.

 

மேலும் விவரங்களுக்கும் உங்கள் அருகாமையில் உள்ள கிளை நிலையம் பற்றி அறிய http://www.bkwsu.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

 

ஆதார் தேவி/அற்புத தேவி கோவில் 

அபு மலையில் உள்ள மற்றுமொரு முக்கியமான ஆன்மிக சுற்றுலாத் தலம் ஒரு குகையில் அமைந்துள்ள இந்த கோவில்.  அபு மலை பேருந்து நிலையத்திலிருந்து வடக்குப் பகுதியில் 3 கிமீ தொலைவில் உள்ளது. மலை மீது செதுக்கப் பட்ட 365 படிகளில் ஏறினால்  இந்த கோவிலை அடையலாம். மலைக் குகையில் உள்ள ஒரு சிறு துவாரத்தின் வழியாகச் சென்றால் கோவிலுள் செல்லலாம். இந்தக் கோவில் துர்காவிற்க்காக அர்பணிக்கப்பட்ட கோவிலாகும். நவராத்திரி நாட்களின் 9 தினங்களில் நிறைய  மக்கள் வருவார்கள்.

ஆதார் தேவி கோவில்

ஆதார் தேவி கோவில்

  

கோவிலுக்கு செல்லும் மலைப் பாதை சற்று செங்குத்தாக இருப்பதால் அதற்கேற்றாற்போல் உடைகளும், பாதணிகளும் அணிந்து செல்வது நல்லது. 

 

தில்வாரா ஜெயின் கோவில் (DILWARA TEMPLE)

தில்வாரா ஜெயின் கோவில்

தில்வாரா ஜெயின் கோவில்

தில்வாரா ஜெயின் கோவில் – கி.பி 11 மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் பளிங்கு கற்களால் கட்டப்பட்ட ஜெயின் கோவிலாகும். உலகின் தலை சிறந்த ஜெயின் கோவில்களுள் ஒன்று. தாஜ்மகாலின் கட்டிட கலைக்கு நிகராக போற்றப்படுகிறது.

 

 

மனிதனின் கலை வண்ணத்தில் சிறந்த சிற்ப வேலைபாடுகளுடன் பிரமாண்டமாய் விளங்குகிறது. 1219 மீட்டர்(4000 அடி) உயரத்தில், சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாத போதே, யானைகள் மூலமாக அம்பாஜி மலையிலிருந்து, அபு மலைக்கு பாறைகளை எடுத்து சென்று இந்த அதிசயமான கோவிலை உருவாக்கியுள்ளனர்.

 

தில்வாரா கோவில் 5 முக்கிய தீர்த்தங்கரர்களின் நினைவாக 5 பகுதிகளைக் கொண்டது.

 

1. ஸ்ரீ மகாவீர் சுவாமி கோவில்   1582 வருடம் கட்டப்பட்ட இந்த சிறிய கோவில் ம்காவீர் சுவாமி (ஜைனர்களின் 24 வது தீர்த்தங்கரர்) க்கு அற்பனிக்கப்பட்டது.  

 

 2. ஸ்ரீ ஆதிநாத் கோவில் / விமல் வஸாஹி கோவில் – 1031 வருடம் கட்டப்பட்ட இந்த முதல் கோவில் ஆதிநாத் சுவாமி (ஜைனர்களின் முதலாவது தீர்த்தங்கரர்) க்கு அற்பனிக்கப்பட்டது. இந்த கோவிலில் திறந்த வெளி மண்டபமும் தாழ்வாரமும் பளிங்கு கற்களால் சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 54 அறைகளில் 54 ஜைன மகான்களின் சிற்பங்கள் பளிங்கு கற்களால் அழகுற செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தின் உள் கூரையில் பூக்கள் மற்றும் இலைகள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. பெரிய ஹாலின் தூண்கள் ஒவ்வொன்றிலும், பெண்கள் வாத்திய கருவிகள் இசைப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளன.

 

3. ஸ்ரீ பார்ஷவ்நாத் கோவில் / கார்டர் வஸாஹி கோவில் 1458-59 வருடம் கட்டப்பட்ட இந்த கோவில் நான்கு பெரிய மண்டபங்களை கொண்டது. இந்த கோவில் தில்வாரா ஜெயின் கோவில்களிலேயே உயரமான கோவிலாகும். தூண்கள் ஒவ்வொன்றும் பளிங்கு கற்களால் அழகுற செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

 

 4. ஸ்ரீ ரிஷப்டாவஜி கோவில் / பித்தல்ஹார் கோவில் – இந்த கோவிலில் சிலைகள் பெரும்பாலும் பித்தளையால் செய்யப் பட்டதினால் பித்தல்ஹார் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவில் குஜராத் ராஜ்ஜியத்தின் மந்திரி பீமா ஷா என்பவரால் கட்டப்பட்டது.

   

தில்வாரா கோவில்

தில்வாரா கோவில்

5. ஸ்ரீ நேமிநாத்ஜி கோவில் / லுனா வஸாஹி கோவில் – 1230 வருடம் தேஜ்பால் மற்றும் வஸதுபால் என்ற சகோதரர்களால் கட்டப்பட்டது. ஸ்ரீ நேமிநாத்ஜி (ஜைனர்களின் 22 வது தீர்த்தங்கரர்) க்கு அற்பனிக்கப்பட்டது.

இந்த கோவிலில் உள்ள ஒரு மண்டபம் ராக மண்டபம், இதில் 360  ஜைன தீர்த்தங்கரர்களின் சிறிய சிலைகள் பளிங்கு கற்களால் அழகுற செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. வெள்ளை பளிங்கில் சிறந்த சிற்ப வேலைபாடுகளுக்காக இந்த கோவில், தாஜ்மகாலின் கட்டிட கலைக்கு நிகராக போற்றப்படுகிறது. ஸ்ரீ  நேமிநாத்ஜியின் பெரிய சிலை கருப்பு பளிங்கில் செதுக்கி வைக்கப்பட்டுள்ளதுஇங்கு  உள்ள 54 அறைகளில் 54 ஜைன மகான்களின் சிற்பங்கள் பளிங்கு கற்களால் அழகுற செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த கோவில் பொது மக்கள் பார்வைக்காக மதியம் 12 லிருந்து 3 மணி வரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அனுமதி இலவசம். புகைப்படம் எடுக்க, நிழற்பட கருவி, கைபேசி போன்ற மின் இயக்க சாதனங்கள் அனுமதி இல்லை.

  

கோவிலின் கலை வண்ணத்தை புகைப்படம் எடுக்க அனுமதி இல்லாததால் அக கண்களால் பதிவு செய்து கொண்டோம். கோவிலுக்கு வெளியே கோவிலின் புகைப்படம் பிரதிகள் வாங்கி கொண்டோம்.

 

அச்சல் கர் கோவில் மற்றும் கோட்டை: 

அச்சல் கர் – அபு மலை பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. இராஜஸ்தானின் சிறந்த கட்டிடக் கலை நிபுணர் ரானா கும்பாவினால் நிறுவப்பட்டது.  இவர் இராஜஸ்தானில் பல கோட்டைகளை நிறுவியுள்ளார்.  மலை உச்சியில் வளைவான மலைப் பாதையில் இந்த கோட்டை அமைந்துள்ளது. அங்கிருந்து 10 நிமிடம் மலையில் ஏறினால் அழகிய ஜைன கோயில் ஒன்று உள்ளது.

அச்சல்கர்

அச்சல்கர்

அச்சல் கர் மலைப் பாதையில் பார்க்க வேண்டிய மற்றுமொரு தலம் அச்சலேஷ்வர் கோவில்.  இந்த கோவிலில் உள்ள நந்தி 5 உலோகங்களால் (பஞ்சதாது-தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, காரியம்) ஆனது. 4 டன் எடை கொண்டது. இந்த கோவில் 9 ஆம் நூற்றாண்டில் சிவனின் கால் கட்டை விரலை சுற்றி கட்டப்பட்டதாக சரித்திரம் கூறுகிறது.  கோவிலில் உள்ள லிங்கம் கட்டை விரல் வடிவிலானது. கோவிலுக்கு அருகில் ஒரு குளம் உள்ளது. இது நரகத்திற்கு செல்லும் வழி என கூறப்படுகிறது. கோவிலுக்கு அருகில் மந்தாகினி ஏரி உள்ளது. இதனை சுற்றி ராஜபுத்திர அரசரின்  சிலையும், எருது சிலைகளும் உள்ளது.

குருஷிகர்

குருஷிகர் மலைப் பகுதி அபு மலையின் உயர்ந்த சிகரம் மட்டுமில்லாது முழு ஆரவல்லி மலைத் தொடரிலேயே உயர்ந்த சிகரம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 1722 மீட்டர் (5650 அடி) உயரத்தில் உள்ளது. மலை உச்சியிலிருந்து பார்க்கும் போது,   அபு மலையின் அழகிய தோற்றமும், பசுமையான ஆரவல்லி மலைத் தொடரின் இயற்கை அழகும் நம்மை மெய் மறக்கச் செய்கின்றன.  

குருஷிகர்

குருஷிகர்

 குரு ஷிகர் மலை உச்சியில் குரு தத்தாத்ரேயரின் கோவில் அமைந்துள்ளது.  கோவிலின் அருகில் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு மணி உள்ளது. இது 1411 ஆம் ஆண்டு நிறுவப் பட்டது. இந்த மலை உச்சியின் அருகில் இந்திய எல்லையை கண்காணிக்கும் ராடார் ஸ்டேஷன் உள்ளது.  மற்றொரு பக்கத்தில் விஞ்ஞர்னிகளின் ஆராய்ச்சிக் கூடம் உள்ளது. இவை அனைத்தும் பாதுகாக்கப் பட்ட பகுதியாகும். 

குருஷிகர் மலை உச்சிக்கு செல்ல சிறிது தூரம் செங்குத்தான மலைப் படிகளை ஏற வேண்டும். முதியவர்கள் செல்ல டோலி (ஒரு கூடையில் வைத்து இருவர் சுமந்து செல்வது) உள்ளது.  ஆனால் டோலியில் செல்ல பணம் அதிகம். சுமார் 250 ரூபாய் ஒருவருக்கு செலவாகும்.  நாங்கள் மெதுவாக மேலேறிச் சென்று கோவிலையும், அழகிய மலைத் தொடரின் இயற்கை அழகையும் ரசித்தோம்.  மேலே செல்ல மாலை நேரமே ஏற்றது.

குருஷிகர் மலை உச்சியில் இருந்தும் சூரிய அஸ்தமனத்தை பார்க்கலாம். இங்கிருந்து கண்ணுக்கு எட்டிய தூரத்திற்கு அப்பால் தெரிவது தான் பாகிஸ்தான் என்று யாரோ சொன்னார்கள். 

அமைதிப் பூங்கா

இந்த பூங்கா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் அமைப்பின் பராமரிப்பில் உள்ளது. இந்த பூங்கா  பிரம்ம குமாரிகள் தலைமையகம் மதுவனத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது.  ஆரவல்லி மலை தொடரில் அச்சல்கர் கோவில் மற்றும் குருஷிகர் கோவில் இடையில் அமைந்துள்ளது. 8 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழில் கொஞ்சும் இனிய சோலையாக திகழ்கிறது.

அமைதிப் பூங்கா

அமைதிப் பூங்கா

இந்த பூங்காவில் விளையாட்டு பகுதி, பொழுது போக்கு பகுதி, ஊஞ்சல் மற்றும் நடை பயிற்சி பாதை என பல அம்சம்கள் உள்ளன. உலகில் உள்ள பல விதமான மலர் செடிகள் இங்கு பூத்து குலுங்குகிறது. பூங்காவில் உள்ளே சென்றதும் பிரம்ம குமாரிகள் அமைப்பின் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் நம்மை புன்முறுவலோடு இனிதே வரவேற்கின்றனர். இயற்கை அழகை கண்டு ரசிப்பதோடு மட்டுமில்லாமல் அக அழகை காணவும் நம்மை அழைக்கின்றனர்.

 

  

ஒலி ஒளிக் காட்சிகள் மூலம் இலவச ராஜயோக தியானம் (மனம் அமைதியடைய எளிய முறை தியானம்) பற்றிய தெளிவான விளக்கங்கள் இங்கு தரப்படுகிறது. பிறகு பூங்காவில் உள்ள மூங்கில் குடிசையில் அமர்ந்து மனம் அமைதியடைய தியானம் செய்யலாம்.

  

பூங்காவில் விளையாட்டு பகுதியில் சிறுவர்களை போல விளையாடினோம். அமைதி குடிலில் அனைவரும் அமர்ந்து ஆன்மிக அமைதி அடைந்தோம். பூங்காவை விட்டு வெளியே வர மனமில்லாமல் வெளியே வந்தோம்.

 

 சூரிய அஸ்தமனம்

சூரிய அஸ்தமனம்

சூரிய அஸ்தமனம்

நக்கி ஏரியிலிருந்து தென் மேற்கு பகுதியில் உள்ள சாலையில் சிறிது தூரம் சென்றால் இந்த பகுதியை அடையலாம். இனிய மாலையில் சூரிய அஸ்தமனத்தை ரசிப்பதற்காக நிறைய மக்கள் அங்குள்ள பாறையில் அமர்ந்திருந்தனர். மலைகளுக்கிடையில் சூரியன் மறைவது பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. மலையின் மீதிருந்தவாறு கீழே உள்ள இயற்கை அழகையும், சுற்றுப்புற பகுதிகளையும் பார்ப்பதற்கு மனதிற்கு இதமாக இருந்தது. 
 

 

 நாங்கள் மாலை 6 மணியளவில் அங்கு சென்றடைந்தோம்.  அங்குள்ள சீதோஷ்ண நிலை ரசிக்கும் படியாக இதமாக இருந்தது. பலரும் பல விதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 6.50 மணியளவில் சூரியன் மறைந்ததும் சிறிது நேரத்தில் அங்கு யாருமில்லை.  அந்த இடம் வெறிச்சோடிக் கிடந்தது.  இந்த பகுதியின் அருகில் தேனிலவு பகுதி (Honeymoon Point) சிறிது தூரத்தில் உள்ளது. 

 

மலையிலிருந்து பேருந்தில் கீழிறங்கி வரும் போது ஒரு சிலருக்கு தலை சுற்றலும் வாந்தியும் வரும், அதனால் காதில் பஞ்சு வைத்துக் கொள்வது நல்லது. எலுமிச்சம் பழமோ அல்லது மாத்திரையோ வைத்துக் கொள்ளலாம்.

Read in English

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: