எனது திருநெல்வேலி பயணம்…

எனது திருநெல்வேலி பயணம்…
நான் அண்மையில் (டிசம்பர் 2008) திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலி சென்று வந்தேன். திருச்செந்தூருக்கு நேரடி இரயில் இல்லாததால் தூத்துக்குடி வரை இரயிலில் சென்று அங்கிருந்து பேருந்து மூலமாக திருச்செந்தூர் சென்று அடைந்தோம். கோவிலின் அருகிலேயே பேருந்து சென்றது. (சில பேருந்துகள் மட்டுமே கோவிலுக்கு அருகில் செல்கின்றன) கோவிலின் அருகில் கோவில் நிர்வாகத்தால் கட்டப்பட்ட விடுதிகள் நிறைய இருக்கின்றன. (ரூபாய் 80 முதல் 100 வரை). தனியார் விடுதிகளும் இருக்கின்றன. கோவிலில் தரிசனம் செய்வதற்காக மதியம் சென்றோம்.

 

அங்கு பல அர்ச்சகர்கள் வெளியிலேயே நின்று கொண்டு கோவிலுக்கு வருபவர்களை மறித்து, நான் அர்ச்சனை செய்கிறேன் என்று சொல்லி பணம் பறிக்கிறார்கள். கோவில் நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. கோவில் தூய்மையாக பராமரிக்கப்படுவதில்லை. தரிசனம் முடித்து மாலையில் அருகிலுள்ள கடற்கரைக்கு சென்றோம். நிறைய பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்தார்கள். திருச்செந்தூரில் சரவணபொய்கை, நாழி கிணறு மற்றும் கடலில் குளிக்க வேண்டும் என்று சொன்னார்கள். நாங்கள் விடுதியிலேயே குளித்து விட்டதால் அங்கு குளிக்க வில்லை. தண்ணீர் மட்டும் மேலே தெளித்துக் கொண்டோம்.

 

திருச்செந்தூரில் இருந்து அன்று மாலை குலசேகரபட்டினம் சென்றோம் (பேருந்தில் 20-30 நிமிட பயணம்). இங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா பண்டிகை மைசூருக்கு அடுத்த படியாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதுவும் கடற்கரை நகரம். முற்காலத்தில் இது துறைமுக நகரமாக இருந்தது. தசரா பண்டிகையின் போது கடற்கரை முழுவதும் மக்கள் வெள்ளமாக இருக்கும். இந்த பண்டிகையின் போது மக்கள் பல வேடங்களில் ஒப்பனை செய்து கொண்டு அம்மனுக்கு வழிபாடு செய்வர்.

திருச்செந்தூரில் காலையில் சூரியன் உதிப்பது பார்க்கலாம். நாங்கள் மறுநாள் காலையில் 6 மணிக்கு கடற்கரைக்கு சென்றோம். ஆனால் அன்று வானம் மேகமூட்டமாக இருந்ததால் சூரிய உதயம் சரியாக பார்க்க முடியவில்லை.

காலை சூரிய உதயம் முடிந்தவுடன் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி புறப்பட்டோம்.(பேருந்தில் 90 நிமிட பயணம்-14 ரூபாய்) திருநெல்வேலியில் காலை உணவு முடித்து அங்கிருந்து கிருஷ்ணாபுரம் சென்றோம்.( திருநெல்வேலி – திருச்செந்தூர் மார்க்கம் 20-30 நிமிட பயணம்-4 ரூபாய்-புதிய பேருந்து நிலையத்திலிருந்து). நாங்கள் சென்ற நேரம் 12 மணி கோவில் மூடியிருந்தது. (காலை 5 மணி முதல் 11.30 வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை திறந்திருக்கும்).

 

கோவில் காப்பாளர் ஒருவர் அங்கு இருந்தார். அவர் எங்களுக்கு கோவில் உள் பிரகாரத்தில் உள்ள அற்புதமான 16 ஆம் நூற்றாண்டு சிற்பங்களை காண்பித்து அவை பற்றி விளக்கமாக கூறினார். அந்த சிற்பங்கள் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தன.

நாடோடி மங்கையின் நடன அசைவுகள், குறத்தி ராஜகுமாரனை தோளின் மீது வைத்து கடத்துவது, அர்ஜுனன் தவக்கோலம், குறவன் ராஜகுமாரியை தோளின் மீது வைத்து கடத்துவது, பூலோக ரம்பை, ரதி, மன்மதன், பீமன் புருஷமிருகத்துடன் சண்டையிடுவதும் பார்க்க அழகாக இருந்தது. இவையெல்லாம் ஒவ்வொரு தூண்களில் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தன. நரம்புகள் புடைத்துக் கொண்டிருப்பதுவும், முட்டி எலும்புகள் அமைப்பும், விரல் நகங்களும் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தன.

 

ஒரு தூணில் காலையும் யானையும் ஒரே தலையுடன் செதுக்கப்பட்டிருந்தன. ஒரு புறம் பார்த்தால் யானை தலையுடனும், மறுபுறம் பார்த்தால் காளை தலையுடனும் தெரிகிறது. புகைப்படம் எடுக்க அனுமதி இல்லாததால் இவற்றை புகைப்படம் எடுக்க முடியவில்லை. ஒரு சில படங்கள் எனது செல்போன் மூலம் எடுத்தேன். (காப்பாளன் “அனுமதி”யுடன் ).கோவில் கருவறை மூடியிருந்ததால் சாமி தரிசனம் செய்ய இயலவில்லை.

மதியம் திருநெல்வேலியில் மதிய உணவு முடித்து, மாலை நெல்லையப்பர் கோவிலுக்கு சென்றோம். ஒரு பிரமாண்டமான கோவில் நெல்லை நகரத்தின் நடுவே இருக்கிறது. நெல்லையப்பர் கோவில் 7 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது.

திருநெல்வேலி பாண்டிய மன்னர்கள் காலத்தில் தலைநகரமாக இருந்தது.  திருநெல்வேலி பெயருக்கு பின்னால் ஒரு பெயர்க் காரணமும் உண்டு.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: